காங்கேசன்துறை துறைமுகத்திற்கு புதிய அங்கீகாரம்
(LBC Tamil) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 44 (2) ஆம் பிரிவின் 3 ஆம் பிரிவிற்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.
டிசம்பர் 23 ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் டிசம்பர் 14 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை மற்றும் புதுச்சேரிக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த நிலையில் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதனிடையே, பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்த கப்பல் சேவை முன்னெடுக்கப்படுவதற்கு இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.