வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் கூட்டு அறிக்கை

(LBC Tamil) தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான தற்போதைய முன்னெடுப்புகள் தொடர்பில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மாணவர்கள் இணைந்து தங்களின் நிலைப்பாட்டை கூட்டு அறிக்கையாக வௌியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம், திரிகோணமலை தென்கயிலை ஆதீனம், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனம், அருட்தந்தையர்கள் சிலர், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிம், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் தமிழ் இனத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பது தொடர்பில், பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுக் கடமை காணப்படுவதாக வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் இணைந்து வௌியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள்  சரியான முறையில் கையாள்வார்கள் என தாம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள தமிழ் தரப்பினரின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், வட கிழக்கில் இராணுவ பலத்தை 25 வீதத்தாலாவது குறைக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை உரிய சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம்  ஒப்படைப்பதன் மூலம் இலங்கை அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என குறித்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு எட்டப்படுவதற்கு முன், வட – கிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983-க்கு முந்தைய நிலைக்கு குறைக்கப்பட வேண்டும் எனவும்,  வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சினையான இராணுவமயமாக்கலைக் குறைத்து இலங்கை அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தமற்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான  நிரந்தர அரசியல் தீர்விற்கு, சர்வதேசத்தினால் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என சிவில் அமைப்புகளின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அடிப்படைகளுடைய அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனபதே தங்களின் நிலைப்பாடாக காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளினால் வௌியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.