உடைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு: தனியாக சென்றது தமிழ் அரசு
2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 21வருடங்களின் பின்னர் இன்று உடைந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத கட்சியாக இருந்து வரும் நிலையில், கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக ரெலோ,புளட், இலங்கை தமிழரசு கட்சி ஆகியவை இருந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழரசு கட்சி தனது சின்னமாகிய வீட்டு சின்னத்தோடு கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்றது.
இதில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி தரப்பில் கருத்து தெரிவித்த போது, மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவு இருந்தாலும், தாம் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் இல்லையென்றும், என்ன செய்யலாமெனவும் வினாவப்பட்டது.
இதன் போது ரெலோ, புளொட் ஆகியவை இணைந்து போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளது.
எப்படி போட்டியிடுவது என பேசப்பட்ட போது, கடந்த தேர்தல்களை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியது.
எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாத காரணத்தால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தது.
தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேசுவதற்கு அவகாசமில்லையென தமிழ் அரசு கட்சி தெரிவித்தது.
இணக்கமாக செயற்பட தயார் எனில், கிளிநொச்சி மாவட்டதிலுள்ள 3 சபைகளை, 3 கட்சிகளும் ஆளுக்கொன்று வீதம் பகிரலாம் என பங்காளிகள் யோசனை தெரிவித்தனர்.
எனினும் அதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படவே, இறுதியில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தது.
இதனை அடுத்து, 3 கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக இரா.சம்பந்தனிடம், சுமந்திரன் தெரிவித்தார்.
பங்காளிக்கட்சிகள் அதில் திருத்தம் செய்து, தமிழ் அரசு கட்சி மாத்திரம் தனித்து போட்டியிடுகிறது, ஏனைய இரு கட்சிகளும் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பாக பரந்துபட்ட கூட்டணி ஒன்றையும் அமைக்கக்கூடும் என்றார்கள்.