யானைக்குட்டியை வைத்திருந்த மூவருக்கு 5 வருட கடூழிய சிறை
(LBC Tamil) யானைக்குட்டி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறி உள்ளிட்ட மூவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் தமித் தொட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சகுரா என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்தமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் யானைகள் பதிவுப் பிரிவின் முன்னாள் எழுதுவினைஞர் பிரியங்கா சஞ்சீவனி மற்றும் யானைக்குட்டியின் உரிமையாளர் சந்திரரத்ன பண்டார யாதவர் ஆகியோர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏனையோராவர்.
வன ஜீவராசிகள் அமைச்சராக இருந்த வசந்த சேனாநாயக்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
வழக்கின் நான்காவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நீதவான் திலின கமகேவை பின்னர் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.