13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் முரண்பட்ட கெவிந்து குமாரதுங்க
(LBC தமிழ்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வியாழன் (26) இடம்பெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தெரிவு செய்யப்பட்ட பதவிக் காலத்தின் எஞ்சிய காலப்பகுதியை தாம் கடமையாற்றுவதால், 13ஐ அமுல்படுத்துவதற்கான ஆணை தமக்கு இல்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்ததன் மூலம் 69 இலட்சம் மக்கள் 13வது திருத்த யோசனையை நிராகரித்துள்ளதாகவும், எனவே தற்போதைய ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “அரசியலமைப்பு பற்றி உங்களுக்கு தெளிவான புரிதல் இல்லை என நினைக்கிறேன் இப்பொழுது நான் தான் ஜனாதிபதி. என்னைத் தெரிவு செய்யும் போது, சஜித்துக்கு வாக்களித்தவர்கள், கோட்டாபயவுக்கும் வாக்களித்தவர்கள் எல்லாம் எனக்கே வாக்களித்தார்கள்” என குமாரதுங்கவுக்குப் ஜனாதிபதி பதில் கூறினார்.
“என்னால் சட்டங்களை இயற்ற முடியாது, அது பாராளுமன்றத்தின் வேலை. நான் முன்மொழிவுகளை மட்டுமே முன்வைக்க முடியும். அவற்றை நிறைவேற்றுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது பாராளுமன்றத்தின் கடமையாகும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.