நச்சு மீன்களை உட்கொண்ட 27 வயதான பெண் பலி
நச்சு மீன்களை உட்கொண்ட 27 வயது பெண் ஒருவர் களுவாஞ்சிகுடி, களுதாவெளி பகுதியில் உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடலில் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வரும்போது அவை பழுதடைந்துவிட்டன. இந்நிலையில் அந்த மீன்கள் உண்பதற்கு உகந்தது இல்லை என மீனவர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வந்த 27 வயது பெண்ணும் தாயும் அந்த மீன்களை மீனவர்களிடம் வாங்குவதற்கு கேட்ட நிலையில் அந்த மீன்கள் நச்சுத்தன்மை அடைந்து விட்டது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த மீன்களை தனது செல்லப்பிராணிகளுக்காக எடுத்துச் செல்வதாக மீனவர்களிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கொண்டு சென்ற மீன்களை உண்டதில் 27வயது பெண் உயிரிழந்துள்ளதுடன், தாயார் வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மீனவர்களின் அறிவுரைகளுக்கு செவிசாய்க்குமாறும், அவ்வாறான மீன்களை உட்கொள்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதைத் தவிர்த்து, அத்தகைய மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.