யாழில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு பொலிசாரின் எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்களாவது,
யாழில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து, சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை செய்து சிலர் காணி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
காணி பதிவாளர் திணைக்களத்தில் காணி தொடர்பிலான தகவல்களை பெறும் வசதிகள் இருந்தும், பலர் போலி உறுதிகளை நம்பி அதிக பணத்தினை கொடுத்து காணிகளை கொள்வனவு செய்து ஏமாறுகின்றனர்.
காணி வாங்குபவர்கள் காணி தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்று காணிகளை கொள்வனவு செய்தால் பணத்தினை இழக்க வேண்டியதில்லை
தற்போது விவசாய காணிகளை மேட்டு நில காணிகள் என உறுதிகளில் மோசடி செய்தும் , காணிகளின் அளவினை கூட்டியும் மோசடி செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. எனவே காணிகளை வாங்குபவர்கள் காணி தொடர்பிலான ஆவணங்களின் உண்மை தன்மைகளை உறுதிப்படுத்தி காணிகளை கொள்வனவு செய்யுங்கள்.
அத்தோடு பாரிய பண மோசடிகள் தொடர்பில் யாழில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது.
இதனுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றோம்.
சமூக ஊடக விளம்பரங்களை நம்பி, தெரியாத நபர்களின் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை வைப்பிலிடுகின்றனர். அவ்வாறு வைப்பிலிடும் போது, காரணத்தை தெளிவாக குறிப்பிட தவறுகின்றனர். அதனால் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.