ஜப்பானில் நிலநடுக்கம்: 48 பேர் உயிரிழப்பு
புத்தாண்டு அன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஒரு பெரிய சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. இதுவரை எதுவித சுனாமிப் பேரலையும் ஏற்படவில்லை.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக 3,000 ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
நிலநடுக்கத்தால் தொடருந்து சேவைகள் மற்றும் விமான சேவைகள் தடைபட்டன. நோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதை முனையம் மற்றும் அணுகல் சாலைகள் சேதமடைந்ததால் மூடப்பட்டது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கடலோர நகரமான சுஸு, 1,000 வீடுகள் வரை அழிக்கப்பட்டதாக அதன் மேயர் மசுஹிரோ இசுமியா கூறினார்.
நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. சில பகுதிகளில் தண்ணீர், மின்சாரம் மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.