விக்னேஸ்வரன் மீது கொலை வெறியில் சிங்கள இளைஞன்!

தன்னை கொலை செய்ய வேண்டும் எனும் கொலை வெறியில்  சிங்கள இளைஞர் ஒருவர் இருந்ததாகவும் பின்னர் அவர் மனம் மாறி விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பி வைத்த கேள்வி – பதில்

கேள்வி :- நீங்கள் “சிங்களம் மட்டும்” கொண்டு வந்ததால் சிங்களம் படிப்பதை நிறுத்தியதாக முன்னர் கூறினீர்கள். பின் ஏன் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் மும்மொழிகளையுந் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்? அத்துடன் அன்று சிங்களம் படிப்பதைப் புறக்கணித்தீர்கள் இன்று ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாதென்று கூறியுள்ளீர்கள். உங்கள் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டுத் தெரிகின்றதே?

பதில் :-  அனுபவமும் காலமும் எமக்குப் புகட்டிய பாடங்களின் அடிப்படையில்த் தான் அவ்வாறு கூறினேன்; என்பது. “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அந்தக் காலத்தில் கல்லூரியில் தொடர்ந்து சிங்களம் படிக்க மறுத்தேன்.

மேலும் சட்டக் கல்லூரியில் சிங்களம் படிப்பிக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்த போது என் சிங்கள மற்றும் தமிழ் நண்பர்களுடன் சென்று சட்டக்கல்லூரி தலைமையாசிரியரிடம் எமக்கு சிங்களம் பயிற்றுவதாக இருந்தால் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் மொழி படிப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர் இணங்கவில்லை.

சிங்கள வகுப்புக்களைப் பகிஸ்கரித்தோம். சில காலத்தின் பின்னர் ஓரிரு முஸ்லீம் மாணவர்களுக்கு சிங்களம் படிப்பிப்பது சாத்தியமில்லை என்று கண்டு அதனைத் தொடராது விட்டுவிட்டனர்.

அன்றைய சூழலில் அவ்வாறு செய்தது உண்மைதான். ஆனால் காலம் மாறிவிட்டது. அன்று நான் சிங்களம் முறையாகக் கற்றிருந்தால் இன்று சிங்கள மொழியில் தமிழ் மக்களின் குறைகளை சிங்கள மக்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்திருப்பேன்.

பேச்சு வாக்கிலே நான் கற்ற சிங்களத்தை வைத்து மகாநாயகர்களுடன் சிங்களத்தில் பேசியுள்ளேன். பல சிங்கள செவ்விகளை ஊடகங்களுக்கு அளித்துள்ளேன்.

காலம் எமக்கு ஒரு முக்கிய பாடத்தைப் புகட்டியுள்ளது.

இலங்கையின் அரசியல்ப் பிரச்சனைகளுக்கு சிங்களத் தலைவர்களின் இன ரீதியான அரசாங்கம் மட்டும் காரணமல்ல. சிங்களப் பொதுமக்களுடன் நாம் அவர்கள் மொழியில் பேசி எமது குறைகளை அவர்களுக்கு எடுத்துரையாமையும் ஒரு காரணமாகும்.

சிங்கள மக்களுக்கு அவர்களின் வரலாறு, தமிழர்கள் பற்றிய வரலாறு, தொல்பொருட்கள் பற்றிய விளக்கங்கள், சுதந்திரப் போராட்டங்களில் தமிழ்த் தலைவர்களுடைய பங்கு போன்ற பலதும் மறைக்கப்பட்;டு வருகின்றன.

எமது பிரச்சனைகள், குறைகள், எமது அபிலாசைகள் , எதிர்பார்ப்புக்கள் போன்றவை சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை.

சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சில நேரங்களில் நான் சிங்களத்தில் வழங்கும் செவ்வியை தணிக்கை செய்தே ஊடக சொந்தக்காரர்கள் வெளியிடுகின்றார்கள். இதை செவ்வி எடுப்பவர்களே எனக்குக் கூறியிருக்கின்றார்கள்.

தமிழர்களின் உண்மைக்குரல், உரிமைக்குரல் சிங்கள மக்களின் காதுகளுக்கு எட்டப்படாது என்பதே அவர்களின் குறிக்கோள். முள்ளிவாய்க்காலில் எவ்வாறு சாட்சிகள் இல்லாமல் இன அழிப்பு நடைபெற்றதோ அதேபோல சிங்கள, ஆங்கில ஊடகங்களில் தணிக்கைகள் மூலம் தமிழர் எதிர்பார்ப்புக்களை, அவர்கள் பற்றிய உண்மைகளை சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்தாமலே பத்திரிகைகள், ஊடகங்களை நடத்துகின்றார்கள்.

கி.பி 10ம் நூற்றாண்டில் சோழர் வருகையின் போது தங்கள் சிங்கள நாட்டுக்கு வந்த கள்ளத்தோணிகளே நாங்கள் என்பது எமது தமிழர்கள் பற்றிய சிங்கள மக்களின் கருத்தாக சிங்கள ஊடகங்கள் எம்மைப் பற்றி சித்திரித்துள்ளன.

என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு  அமைந்தது.

இளைஞர் – “சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான “தெமள பௌத்தயா”வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர்தான் உங்கள் கூற்றுக்களின் உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன்.”

நான் – “தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்! எனக்கு இப்பொழுது 83 வயது. தொடர்ந்து இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை.”

இளைஞர் – :”இல்லை சேர்! நான் வெறும் பேச்சுக்கே அவ்வாறு சொன்னேன்.”

இன்றுவரை அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஆனால் அவர் தமது மனமாற்றத்தை வெளியிட்டமை தான் இந்தக் கேள்வி – பதிலுக்கு முக்கியமானது.

சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் – சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருப்பதற்குக் காரணம்.

ஆகவேதான் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலுக்குத் தரப்படப் போகும் விசேட சலுகைகளைப் பாவித்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் சிங்கள மக்களைச் சென்றடையும் வண்ணம் சிங்களத்தில் ரூபவாகினி மூலம் பேச முடியும் என்று கூறினேன். அதற்காகவே சிங்கள அறிவு பெற்ற ஒரு தமிழரை முன்னிறுத்துவது உசிதம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் கோசலை மதன் போன்றவர்கள் சிங்களத்தில் பேசக்கூடியவர்கள். வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து வைத்திருப்பவர்கள். சிங்கள மொழி எம்மால் புறக்கணிக்கப்பட்டதால் தமிழ் மக்களின் அவலநிலை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதை காலமும் அனுபவமுந் தான் எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

அடுத்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்? அரசாங்கத்திற்கு சார்பான வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கமாட்டா? மும்முரமாக வேலைசெய்து புறக்கணித்த மக்களின் வாக்குகளையும் தேர்தலில் பதியச்செய்து விடுவார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் பின்வருமாறு கொட்டை எழுத்துக்களில் தலையங்கங்கள் வருவன –

“புறக்கணிப்பு பிசுபிசுத்து விட்டது. வடகிழக்கு தமிழ் மக்கள் எவர் பேச்சையும் கேட்காது சென்று இன்னாருக்கு வாக்களித்தார்கள்.”

இப்படி நடக்கக் கூடும் என்பதும் எமக்கு காலமும் அனுபவமும் கற்றுத்தந்த பாடங்கள்தான் என கேள்வி பதிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.