குருந்தூரில் சிவன் குந்தியிருக்க ஒரு துண்டு காணி!
குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள விகாரையினை இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்ற பேரில் தக்கவைக்க சதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
2018 ம் ஆண்டு முதல் குருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விகாரை விவகாரம் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையே பாரிய முறுகல் நிலையை உருவாக்கி தொடர்ந்து வருகிறது.
குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் இராணுவ ஒத்துழைப்புடன் விகாரை அமைக்கும் பணியினை முன்னெடுத்த கல்கமுவ சாந்த போதி தேரர் குறித்த விகாரையின் விகாராதிபதியாக இருந்து நிர்மாணங்களை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தொடர்பில் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ரி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.இந்நிலையில் குருந்தூர் மலை விவகாரமானது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் விகாரையின் விகாராதிபதியான கல்கமுவ சாந்த போதி தேரர் நீக்கப்பட்டதாகவும் புதிதாக விகாராதிபதியாக சியம்பலகஸ்கல விமலசார தேரர் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இனமத நல்லிணக்கத்தினை மேற்கொள்ளவென வடகிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக ரணிலால் புதிதாக நியமிக்கப்பட்ட சியம்பலகஸ்கல விமலசார தேரர் தலைமையில், சிவசேனை அமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் எனஇரகசிய கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கின்றது.
அருகாக சிவன் ஆலயமொன்றை அமைப்பதன் மூலம் விகாரையினை நீதிமன்ற தீர்ப்பிலிருந்து பாதுகாக்க சதிகள் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகங்கள் வலுத்துள்ளது.