பொருளாதார நெருக்கடியால் மிகவும் சிரமப்படும் அமைச்சர் பவித்ரா
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்க நிதி வெளிப்படைத் தன்மையுடன் செலவிடப்பட வேண்டுமெனவும், மோசடிகள் நடைபெறாதவாறு அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும் எனவும் நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரமாக எழுந்து நிற்க தேவையான பலத்தை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகளை பவித்ரா வன்னியாராச்சி
கேட்டுக் கொண்டார்.
மேலும் நீர்பாசன திட்டங்களுக்கு பணம் செலவழிப்பதில் நிதி முறைகேடு ஏற்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உங்களையும் என்னையும் போல, பொருளாதார நெருக்கடியில் நாம் அனைவரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம்,
இந்த பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.