யாழ் நகரப்பகுதியில் இளைஞனை கடத்த முற்பட்டவர்களை சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள்!!
யாழ் நகர் பகுதியில் இளைஞனை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது தந்தையுடன் இளைஞன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை , ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவர்களை வழிமறித்து , தமது கைபேசியில் இளைஞனின் புகைப்படத்தை காட்டி , “இது நீ தானே ?” என வினாவியுள்ளனர்.
அதற்கு இளைஞன் ஆம் என்றதும் , இளைஞனை பிடித்து தமது மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டுள்ளனர். அதன் போது இளைஞனும் தந்தையும் , கடத்தல் கும்பலுடன் முரண்பட்ட போது பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதும், மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பி சென்றுள்ளனர்.
ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து , தடுத்து வைத்திருந்து , யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , பொதுமக்களால் மடக்கி பிடித்து வைத்திருந்த இளைஞனை மீட்டு சென்றனர்.