இலங்கை திரும்புகிறார் சாந்தன் – சிறீதரன்
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
இந்தியாவில் உள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசியுள்ளதாக தமிழரசுகட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் இருந்து பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கை திரும்பி வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது. அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் விடயம் சரிவரும். அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்தில் விடயம் சாத்தியமாகும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக சிறீதரன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தூதரகத்தின் துணை தூதுவருடனும் நான் தொலைபேசியில் பேசினேன் . பாதுகாப்பு அமைச்சினுடைய சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிபடுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரி தெரிவித்ததாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கல்லீரல் பாதிப்பினால் அபாய கட்டத்தில் சாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.