தம்மன்னாவை சந்திக்க ஓசியில் விடவில்லை என தம்பி கெம்பி போராட்டம் நடத்துவது சரியா?
நாளை இந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாழ் வந்துள்ள திரைப்பட நடிகர் நடிகைகளோடு சந்திப்பதற்கு 30000 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதில் சேகரிக்கப்படும் அனைத்து பணமும் யாழ்பாண கல்வி மேம்பாட்டு மையத்திற்கு வழங்கப்படுமென இதனை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் தம்பி என்கின்ற தம்பிராசா யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் நடிகைகளை சந்திப்பதற்கு கட்டணம் அறவிடுவதனால் யாழ்ப்பாணத்தில் நடிகைகள் தங்கிய விடுதிகளை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திரைப்படங்களில் கூட யாழ்ப்பாண கலாச்சாரத்தை பெருமையாக பேசும் அளவிற்கு கலாச்சாரத்திற்கு பெயர் போன இடமே யாழ்ப்பாணமாகும். ஆனால் இங்கே சினிமா நடிகைகளை அழைத்து அவர்களோடு புகைப்படம் எடுப்பதற்கு பணம் பெறும் கேவலமான செயலை நடத்த முற்படுகின்றனர்.
இந்த மண்ணிலே இசை நிகழ்ச்சிகளை செய்வதை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம். ஆனால் எமது மக்களை வைத்து வியாபாரம் செய்வார்களானால் அவர்களுக்கு எதிராக போராடுவதற்கு ஒருபோதும் பின்நிற்க மாட்டோம்.
எமது மக்களுடைய வலிகளையும் துன்பங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும் இல்லையேல் நடிகர்களை, நடிகைகள் தங்கியுள்ள இடங்களை முற்றுகையிடுவோம். அத்துடன் மீண்டும் யாழ் மண்ணிலே கால் பதிக்க முடியாமல் செய்து விடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றேன் என தம்பிராசா கெம்பி எழுந்தார்.
வாய் சொல்லில் வீரரடி, ஆனால் செயலளவில் கோழையடி என்பது போல இவரது முற்றுகை செய்தி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இன்று தேசியம் சார்ந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை பார்க்கிலும் சினிமா நிகழ்வுகளில் பல மடங்கில் கலந்து கொள்கின்றனர்.
இன்று யாழ்ப்பாணம் தமது கலை கலாச்சாரங்களை மறந்து வழி மாறி பயணிப்பது யாவரும் அறிந்ததே.
போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைத்தும் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடுருவி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் பலருக்கும் தெரிந்ததே.
இவற்றை எல்லாம் சரி செய்ய முடியாத தம்பி இந்த நிகழ்விற்கு ஆக்ரோஷமாக கெம்பி எழுவது ஏன்? சிந்திக்க தெரிந்த மக்களாகிய உங்களிடம் இந்த கேள்வியை விட்டுவிடுகிறோம்.