யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஜெட் விமானம் அன்பளிப்பு செய்யும் இலங்கை விமானப்படை!
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் நிகழ்வின் இறுதியில் பழுதடைந்த ஜெட் விமானம் ஒன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைக்காக வழங்கவுள்ளதாக விமானப்படையின் மேஜர் ஜெனரல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி இலங்கை விமானப்படையின் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருகட்டமாக “எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்யும் வேலைத்திட்டமும், வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்று நடும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் யாழ் முற்றவெளி மைதானத்தில் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் இடம்பெறவுள்ளது.
கண்காட்சிகள் நடைபெறும் நாட்களில், இலங்கை விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள் இலவசமாகவும், பொது மக்களுக்கு 100 ரூபாய் நுழைவு கட்டணமும் அறவிடப்படவுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விமானப்படை கண்காட்சிக்கு, 2லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பழுதடைந்த ஜெட் விமான இயந்திரம் ஒன்றை யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.