கட்சிக்கு அங்கீகரமில்லை, எனவே சின்னமும் இல்லை: நாம் தமிழருக்கு வந்த சோதனை!
நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்குமாறு அந்த கட்சியால் கோர முடியாது. இது குறித்து பரிசீலனை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாதுஎன டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
எனினும் திடீரென இந்திய தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஆகியதா என்ற BAP கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இது சீமான் உட்பட நாம் தமிழர் கட்சிக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை பிஏபி கட்சியிடம் இருந்து கேட்டு பெறும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தங்களது கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கும் தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி, நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. ஒரு கட்சிக்கு குறிப்பிட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் நிரந்தரமாக ஒரு சின்னத்தை ஒதுக்கவும் கோரிக்கை வைக்க முடியும். கரும்பு விவசாயி சின்னம் என்பது பொதுவான சின்னம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. இதனைத்தான் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நடைமுறையாக பின்பற்றுகிறது. இந்த நடைமுறையை எப்படி மாற்றிவிட முடியும்?
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் லக்கியான சின்னமாக இல்லை போல தெரிகிறது. ஆகையால் வேறு ஒரு சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். இது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.