அதி சொகுசு பஸ்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும் போதை மாத்திரைகள்!
யாழ்ப்பாண நகர் பகுதி பாடசாலை மாணவர்கள், இளவயதினருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் நேற்று முந்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றி வரும் குறிப்பிட்ட சில அதி சொகுசு பேருந்துகளில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இந்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குருநகரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாவாந்துறை பகுதியில் முஸ்லிம் இளைஞரே இந்த குழுவின் பிரதான சூத்திரதாரி எனவும் அந்த முஸ்லிம் நபரே கொழும்பிலிருந்து போதை மாத்திரைகளை தருவித்து, விற்பனைக்கு விநியோகிப்பதாக தெரிவித்தனர்.
அவரை கைது செய்ய முற்பட்ட போது, முச்சக்கர வண்டியை கைவிட்டு ஓடிதப்ப முற்பட்ட போது, விரட்டி பிடிக்கப்பட்டார்.
10 மாத்திரைகளை கொண்ட ஒரு அட்டையை 700 ரூபாவிற்கு கொழும்பில் கொள்வனவு செய்து, நாவாந்துறை நபருக்கு 2000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், இந்த நபர் அதை 2700 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல், அதை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் 3500 ரூபாவிற்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
கொழும்பிலிருந்து வரும் சில சொகுசு பேருந்துகளில் உதவியாளர்களாக பணியாற்றும் இளைஞர்கள், இந்த மாத்திரைகளை கொழும்பிலிருந்து கொண்டு வர உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைதான 6 இளைஞர்களும் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அண்மையில் திருத்தப்பட்ட சட்டமூலத்தின்படி, ஆபத்தான போதை மாத்திரைகளையும் அபாயகரமான போதைப்பொருட்களில் இணைக்கப்பட்டுள்ளதால், போதை மாத்திரை விற்பவர்களும் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.