விகாரைக்குள் வைத்து ஆமிக்காரன் அடித்து கொலை செய்யப்பட்டது ஏன்?
கண்டி, கெட்டம்பே, தியாகப்பனதோட்டை பௌத்த விகாரை வளாகத்திற்குள் வைத்து இராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மெனிகின்னவை சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாயான 43 வயதுடைய சமில சுதீர ரத்நாயக்க என்பவரின் சடலத்தை விகாரையின் வாகன தரிப்பிடத்தில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.
விகாரையில் திருடுவதர்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பொலிஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஹெல்மெட்டை பொலிசார் கண்டுபிடித்தனர். இறந்தவர் விகாரைக்கு வர மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பலரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் குறித்த நபர் ஆலய வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கயிறுகளால் கட்டப்பட்டு பல மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விகாரையில் இருந்து எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும், இந்த சம்பவமானது சந்தேகத்திற்குரிய குற்றமாகவே கருதப்படும் எனவும் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் பொலிஸ் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நாளில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பொலிசார் விசாரணை செய்த போது, சத்தம் கேட்டு பார்த்த போது, பலர் மற்றொருவரை அடிப்பதை தான் அவதானித்ததாக கூறியுள்ளார்.
விகாரை பிரதமகுரு உட்பட பலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.