தப்பி சென்ற இராணுவ வீரர் போதைப்பொருளுடன் கைது
இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை – வெயங்கொடை வீதியின் யாகடுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி கட்டுபொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் ஜீப் வண்டியுடன் விபத்துக்குள்ளாகி குறித்த அதிகாரியை தாக்கி ஜீப்பை சேதப்படுத்திய சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் இவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, 8 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் இராணுவத்தினர் பயன்படுத்திய 5 சீருடைகள் மற்றும் 9 மி.மீ ரக 6 தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
34 வயதுடைய சந்தேக நபர் கட்டுபொத – அலஹிதியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களை நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.