விவசாய துறையை மேம்படுத்த நீண்ட வேலைத்திட்டம் அவசியம் – ஜனாதிபதி
இலங்கையின் முறையற்ற நிலைக்குள்ளாகியுள்ள விவசாயத் தொழிலை ஒழுங்குபடுத்தி, கட்டமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவர, நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வில் கலந்துகொண்டு பேசுகையில், தற்போதைய அமைச்சின் திட்டங்கள் மற்றும் திட்ட நடைமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதுவரை கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியடைந்தாலும், அதன் மூலம் கிராமப்புற வறுமையை தீர்க்க முடியவில்லை என்பதற்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் கிராமப்புற வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான திசையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
கிராமப்புற வறுமையை ஒழிக்க புதிய, விரிவான வேலைத்திட்டங்கள் தேவை என வலியுறுத்திய அவர், வறுமை என்பது வெறும் பணப் பற்றாக்குறையைக் காட்டியல்லாமல், சமூகத்தில் ஒருபிரிவினரை பின்னுக்குத் தள்ளி, சமூகப் பேரழிவை ஏற்படுத்தும் காரணமாக அமைகிறது என்றும் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் விவசாயத் துறை தொடர்பான அமைச்சின் மேல்நிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.