சிவராம் கொலை தெரியாது என்கிறார் சித்தர்!
ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை வழக்கினை அநுர அரசு தூசு தட்டுகின்ற நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் குழப்பம் தோன்றியுள்ளது.
இதனிடையே தராகி சிவராம் கொலைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட என்னிடம் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
வேறு நபர்களே அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
அது தொடர்பில் அரசு இப்போது கூறியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே கருதுகின்றேன். ஜே.வி.பியினரும் வடக்கு, கிழக்கிலே போட்டியிடுகின்றார்கள்.
தங்கள் அரசியல் நலன்களுக்காகவே இந்த வழக்குகளைப் பற்றி அவர்கள் பேசியிருக்கின்றார்கள். அதுபோல ஏனைய தமிழ்க் கட்சிகளும் தங்கள் அரசியல் நோக்கத்துக்காகவே தராகி சிவராமையும் எங்களையும் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருக்கின்றன.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கை தூசு தட்டுவதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் தராகி சிவராம் லக்ஸ்மன் கதிர்காமரது பணிப்பின் பேரில் சித்தார்த்தனது நெருங்கிய சகாவாக இருந்து அண்மையில் மரணித்த ஆர்.ஆர் எனப்படும் இராகவன் மற்றும் பீற்றர் ஆகிய இருவரது பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கோல்லப்படுவதற்கு முன்னதாக சிவராமை கடத்த சித்தார்த்தனது வாகனம் பயன்படுத்தப்பட்டதுடன் அவை தொடர்பில் சித்தார்த்தன் முன்கூட்டியே அறிந்திருந்ததாக கூறப்படுகின்றது.
Source link