சின்னத்துக்காய் அலையும் போலி தமிழ் தேசிய வாதிகள் – ஈபிடிபி

“ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பி, சின்னங்களிற்காய் அங்கலாய்க்கும் நிலை காணப்படுகிறது” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தத்தமது சுயநலக் கருத்துக்களை தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் திணித்துவந்த இதர தமிழ் அரசியல்வாதிகள் இன்று எமது வழிமுறையான அரசியல் தீர்வுடன் அன்றாட பிரச்சினையும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு வேண்டும் என கருத்துக்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். இதனூடாக அவர்களிடம் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கான தூரரோக்குப் பார்வை இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது.

அந்த வகையில் எம்மை பேரம்பேசும் சக்தியாக நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆணை வழங்கினால் நிச்சயம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை எம்மால் எட்ட முடியும். அதனை வெற்றிகொள்ளும் வகையிலான பொறிமுறையும் எம்மிடம் உள்ளது.

இதேநேரம் ஒற்றையாட்சி வேண்டாம் சமஸ்டியே வேண்டும் என கோஷமிடுபவர்கள் இன்று அதே ஒற்றையாட்சி முறையிலான தேர்தலில் தமக்கு அதிகளவான அங்கத்தவர்கள் கிடைக்க வேண்டும் என அலைகின்றார்கள். இதிலிருந்து தெரிகிறது அவர்களது நிலைப்பாடுகள்.

அமையப்போகும் பாராளுமன்றில் நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவோம். எமது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பலத்தை எமக்கு வழங்குவார்களாயின் மத்திய அரசுகளின் அந்த நிலைப்பாட்டை நிர்பந்தம் கொடுத்து எம்மால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

எமது இந்த நம்பிக்கைக்கு எமது கட்சியின் இணக்க அரசியலும் இன நல்லிணக்கமும் மத்தியுடன் நாம் கொண்டுள்ள சோரம் போகாத நிலைப்பாடுமே காரணமாக இருக்கிறது.

இதேவேளை அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது இளைஞர்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொண்டவர்கள் அதனை தீர்க்கவேண்டும் என்ற அக்கறையுடன் இருப்பவர்கள் யார் என்பதுதான் இங்கு முக்கியம் பெறுகிறது.

எனவே, தமிழ் மக்களின் அரசியல் புலத்தின் மாற்றம் என்பது இதன் அடிப்படையில் அது எம்மை நோக்கிய எமது கட்சியின் வீணை சின்னத்தை நோக்கிய அணிதிரள்வானதாகத்தான் இம்முறை அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.