சனிக்கிழமை புதிய தாழமுக்கம்

எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி உருவாகின்றது. இது எதிர்வரும் 11.12.2024 அன்று வலுவடைந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலையில் இது ஒரு காற்று சுழற்சியாகவே உள்ளது. ஆனால் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் நிகழும் வளிமண்டல நிலைமைகள் இதனை ஒரு தாழமுக்கமாக மாற்றலாம். தற்போது இந்த காற்று சுழற்சியின் நகர்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு அண்மையாக நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன. ஆனால் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.

இதன் காரணமாக எதிர்வரும் 08.12.2024 முதல் 20.12.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்த மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

தற்போது எங்களுடைய காலநிலை பருவத்திற்கும் பயிர் பருவத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் வானிலை மாற்றங்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

காலப்போக்கில் இந்த வானிலை மாற்றங்கள் எங்கள் நாட்டின் உணவுற்பத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு சிறந்த உதாரணம் கடந்த வாரம் நிகழ்ந்த பெங்கால் புயல் தாக்கத்தினால் 350000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றாக அழிந்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த புயல் காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து தற்போது ஒரு கிலோ அரிசி (குறிப்பிட்ட வகை அரிசி) கிலோ 300 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இந்த நிலை நீடித்தால் வெகு விரைவில் ஒரு கிலோ அரிசி 500/- க்கு விற்கப்படும்.

எனவே மேற்படி விவசாயம் மற்றும் காலநிலை துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து எங்கள் பயிர்ச்செய்கை பருவம் தொடர்பான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் ஊடாக திடீர் வானிலை மாற்றங்களால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

– நாகமுத்து பிரதீபராஜா –

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.