பாடசாலை உபகரணங்களின் விலைகள் குறைக்கப்பட்டன
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
காகிதங்களுக்கு 18 சதவீத VAT மற்றும் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி இருப்பதாகவும், இந்த இரண்டு வரிகளையும் நீக்கினால், பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலையை மேலும் குறைக்க முடியும் என்றும் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.
புதிய கல்வியாண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்களை பெற்றோர்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வாய்ப்புள்ளதாகவும், பாடசாலை ஆடைகளின் விலை கூட 20 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் வற் வரி அதிகரிப்பு மற்றும் சில பொருட்களுக்கு புதிய வற் வரியை சேர்த்தமையினால் நடுத்தர மற்றும் சிறு கைத்தொழில்துறையினர் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், அதன் பலனை மக்களுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், தற்போதுள்ள அதிக வரிகளால் மக்களுக்கு பலன் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பியாசக் கொப்பிகளின் விலைக் குறைப்பின் கீழ் கடந்த காலங்களில் 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 60 ரூபாவாகவும், 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.