அலுவலகத்தில் பலர் சும்மா இருக்கின்றார்கள் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லை என்றால் அதனை  செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை நிதி மூலங்கள் ஊடாக ஒரு கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக தாயும் சிசுவும் ஒன்றாக இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில்  சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது,

ஓரிடத்தின் தலைமைத்துவத்தில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது என்பது உண்மை.  அலுவலகங்களில் ‘சும்மா இருப்பவர்கள்’தான் இன்று அதிகமாகிக்கொண்டு செல்கின்றனர். என்னைச் சந்திக்கும் பொதுமக்களும் அதனைத்தான் சொல்கின்றனர். ஓர் அலுவலகத்துக்குச் சென்றால் இருவர் வேலை செய்வார்கள். ஏனையோர் பேசாமல் இருப்பார்கள் என்று முறையிடுகின்றார்கள்.

இதுபோதாது என்று எதிர்மறையாகச் சிந்திக்கும் அலுவலர்களும் அதிகமாகின்றது. ‘முடியாது’ என்ற வார்த்தைதான் அவர்களிடமிருந்து வருகின்றனது. தாம் எதையும் எம்மால் செய்ய முடியும் என நினைக்கவேண்டும். அல்லது அதை எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

என்னை அரசியலுக்கு அழைத்துவருவதற்கு சிலர் கடந்த காலங்களில் முயற்சித்தார்கள். நான் அதை அடியோடு மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை. எனக்கு அந்த எண்ணமும் இல்லை.

ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாம் மாற்றுத் திட்டங்களை தயாரிக்கவேண்டும். இந்த மருத்துவமனையின் ஏனைய தேவைகளில் எங்களால் செய்து தரக் கூடியவற்றை விரைந்து செய்து தருவோம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, பருத்தித்துறை பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.