பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு?

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தியிருந்தார்.
சில ஊடகங்களில் “அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துவிட்டது” என்று தகவல்கள் வெளியான நிலையில், இது உண்மை இல்லை என அமைச்சர் “அத தெரண” ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறி கோரிக்கைகளை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணை அறிக்கைகள் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளை பரிசீலித்த பின்னரே, தேவைப்பட்டால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதேவேளை, ஆளுங்கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் பாதுகாப்பு கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.