யாழில் இராணுவ ஆட்சி பிரகடனமா? சட்டத்தரணி சுகாஸ் கேள்வி!
யாழ் மாவட்டத்திற்கு மாத்திரம் விசேடமாக இராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா என சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொன்னாலை பகுதியில் நள்ளிரவு வேளையில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த கேள்வியினை எழுப்பினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொன்னாலைப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இராணுவத்தினர் நுழைந்து மிலேச்சதனமாக தாக்குதல்களை நடாத்தியதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
எனக்கு எழுகின்ற கேள்வி, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகின்ற கடப்பாடு பொலிஸாருக்கு இருக்கிறதா அல்லது இராணுவத்துக்கு இருக்கிறதா? மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்து தாக்குகின்ற அதிகாரத்தினை இராணுவத்திற்கு யார் வழங்கியது?
இலங்கையில் 1978ம் ஆண்டு 2வது குடியரசு அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா? என்ற கேள்விகள் எங்களது மனதிலே எழுந்திருக்கின்றது.
பொன்னாலைப் பகுதி மக்கள் இராணுவத்தினரின் வெறியாட்டத்தினால் மிகவும் அச்ச உணர்விலே இருக்கின்றார்கள். இராணுவத்தினரின் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இதுசட்டம் ஒழுங்கினை முன் உரிய ஒரு மனிதஉரிமை மீறல். இலங்கையிலே சித்திரவதைகளும் இராணுவத்தினரின் அட்டூழியங்களும் தொடர்பு கொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
வருகின்ற செப்டம்பர் மாதம் ஜெனிவாவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய அமர்வு ஆரம்பமாக இருக்கின்ற இச்சூழ்நிலையில் இராணுவத்தினரின் இச்செயற்பாடு இலங்கை அரசின் கோரமுகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றார்.