யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களான குழந்தை பரிதாபமாக பலி
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று, வெள்ளிக்கிழமை (18) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 16ஆம் திகதி உடல் சுகயீனமுற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தொடக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, குழந்தை இறந்துவிட்டது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலத்தின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். இறப்புக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாததால், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.