மாவனெல்லையில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் பலி
தகராறு ஒன்றினை தீர்ப்பதற்காக மாவனெல்லை, பதியதொர பிரதேசத்திற்கு பொலிசார் சென்ற போது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (06) இரவு இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி அழைப்பு மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சந்தேக நபர் மாவனெல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் பல தடவைகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், மற்றைய சந்தேகநபர் 24 வயதுடையவர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். .
காயமடைந்த அதிகாரிகள் இருவரும் தற்போது மாவனல்லை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் மாவனெல்லை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.