டெங்கு, யாழில் ஒரு வயது குழந்தை மரணம்!
யாழ் தாவடியைச் சேர்ந்த 11மாத ஆண் குழந்தை டெங்குக் காய்ச்சலால் இன்று மரணித்துள்ள நிலையில் மேல் மாகாணம் டெங்கு அபாயகரமான பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேல் மாகாணத்தில் தொற்றுநோயாக மாறாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
டெங்கு நோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், ஆளுநர் செயலாளர்கள், மாவட்ட ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவன சபைகளின் தலைவர் ஆகியோருக்கு டிசம்பர் 22ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இதுவரை 38,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நாடு முழுவதிலும் இருந்து 84,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 50 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் சமரவீர தெரிவித்துள்ளார்.