கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அஸ்மி நியமனம்
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமைகளை சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். அஸ்மியின் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த அனுபவம் மற்றும் தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ திறமைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்மி கடந்த 10 வருடங்களில் உள்ளூராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து, கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் கல்முனை மாநகரசபை என்பவற்றை மிளிரச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.
இவர் பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேசசெயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்து சேவைகளை ஆற்றியுள்ளார்.