தமிழ் பொதுவேட்பாளருக்கு கரம் நீட்டீனார் பசீர் காக்கா
இறுதியுத்தம் முடிந்து 15 வருடங்களாகிவிட்டது. பேச்சுவார்த்தை, பேசுதல் என்பவற்றை தொடர்ந்து கேட்டு காது புளித்துப்போய்விட்டது. தமிழரின் ஆறாம் அறிவைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் புதுப்புது விளக்கங்களைக் கேட்டாயிற்று. எனவே, நாம் இனி அடுத்த கட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொள்வோமென மூத்தபோராளி “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிடுகையில் மாவீரர் அறிவிழியின் தந்தையாக எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றேன்.
அண்ணர் அரியநேத்திரன் 1984ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவரது சொந்தக் கிராமமான அம்பிளாந்துறையில் அறிமுகமானவர். போராட்ட பங்களிப்பு காரணமாகவே 2004 பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்வானவர்களில் ஒருவராக அவரது பெயர் கிளிநொச்சியிலிருந்து அறிவிக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் நெருக்கடிகளின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல்களை எப்படியோ தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்.
தமிழ்த் தேசியம் என்பதை வெறும் எதிர்ப்பரசியல் என்று கொச்சைப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால், எம்மை யார் என உணரவைத்து உணர்வோட்டத்தில் ஒன்றிக்கலக்க வைத்த விடயம் அது. எல்லாவிதத் தடைகளையும் துரோகங்களையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னோக்கிச் செல்வோம். புலம்பெயர் உறவுகளும் தாயகத்திலுள்ளோரும் கைகோர்த்து அதனை சாத்தியமாக்குவோம் எனவும் பசீர் காக்கா அழைப்பு விடுத்துள்ளார்.