பாடசாலை மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி!
பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கையின் வயதுக்கு வந்த மாணவிகளின் எண்ணிக்கை சுமார் 12 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 8 இலட்சம் மாணவிகளுக்கு 2024 ஏப்ரல் தொடக்கம் ஆண்டுதோறும் இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கினிற்காக 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.