நாடாளுமன்ற தேர்தலில் சங்கு கொழும்பிலும் போட்டி
சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பதிவு செய்த கட்சியாக இருந்தமையால் குத்து விளக்கு சின்னம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது கட்டமைப்பு ஒன்றினை நிறுவி இருந்தோம். அதனை தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சேர்ந்தே நிறுவி பொது வேட்பாளராக அரியநேந்திரனை நிறுத்தினோம்.
அதற்கு சங்கு சின்னம் எமக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சங்கு சின்னத்திற்காக நாம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக உழைத்துள்ளோம். அதன் அடிப்படையில் சங்கு சின்னத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் 2 இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கப்பெற்றன
பொது கட்டமைப்பின் ஒரு அங்கமாக தமிழ் கட்சிகள் இருந்தமையால் , இந்த தேர்தல் சின்னமாக சங்கினை மாற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரினோம்
அந்த கடிதம் பொதுக்கட்டமைப்பில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பொது சபை என்பவற்றின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் கடிதம் எழுதினோம்.
அந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டு எமக்கு சங்கு சின்னத்தை தந்துள்ளார்கள். அதில் தான் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ளோம்.
அதன் அடிப்படையில் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் போட்டியிடும் என மேலும் தெரிவித்தார்.