வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியை வலியுறுத்த முடிவு
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது வீட்டில் நேற்று (23.11.2022) கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் சுமூகமாகவும் இணக்கமாகவும் நடைபெற்றது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களோடு இன்று (24.11.2022) சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்ற அழைக்கப்படுவார்கள் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்வு முயற்சிகளுக்கான பேச்சு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள களச்சூழல் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வு பேச்சு முயற்சியில் ஆரம்பத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்கு சமஷ்டி தீர்வு என்ற அதிகாரப் பகிர்வு விடயத்தை ஒன்றுபட்டு நின்று வலியுறுத்துவது எனவும், நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களை பரிசீலித்து தீர்மானங்களை எடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என கூட்டத்தில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.