எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல தொல்லியல் திணைக்கள செயற்பாடுகள் அமையக்கூடாது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
(LBC Tamil) இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களினம் கலாச்சாரங்களையும் தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுத்தல்களும் இடம்பெற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
இதனை விடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அமையக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சுழிபுரம் பறாளை முருகன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மூன்று தொல்லியல் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதிகளாக சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிகளை தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தும் செயற்பாடுகளானது உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதியும் அரசாங்கமும் பல முயற்சிகளை எடுத்து வருகின்ற நிலையில், குறுகிய நலன்களுக்காக சிலரால் முன்னெடுக்கப்படும் இந்த விடையங்கள் வேதனைக்குரியவை.
- குருந்தூரில் பொங்குவதற்கு எதிராக செயற்படோம் – தொல்லியல் திணைக்களம்
- வயல் காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட இணக்க அரசியல் என்பது, இருப்பவற்றை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி நகர்வதாகவும், தவறான நடவடிக்கைகளை கண்டுகொள்ளாது விட்டு விட்டு கடந்து செல்வதாக இருக்க முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுகொண்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவைகளில் தொடர்ந்து கலந்துரையாடி சரியான தீர்மானங்களை எடுப்பதன் ஊடாக தவறுகள் நிகழ்ந்திருந்தால் திருத்திகொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.