ஹர்த்தால் அறிவிப்பை உடன் மீளப் பெறுங்கள் – சச்சி அறிக்கை
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பது உடனடியாக மீளப் பெறுமாறு கோரியுள்ளார் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“குபேரர்களுக்குக் குடிசை மக்களின் துன்பம் தெரியாது. பொது முடக்கத்துக்கு அழைத்த அரசியல்வாதிகளுள் பலர் குபேரர்கள். வசதிகளின் மடியில் வாழ்பவர்கள். சொகுசுகளின் சொப்பனத்தில் மகிழ்பவர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பில் திளைப்பவர்கள் பலர். மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சுவோர் சிலர்.
இன்று உழைத்தால் நாளைய கஞ்சி. இன்றைய சம்பளம் நாளைய தீபாவளிக்கு. ஈழத் தமிழர் தாயகத்தின் உழைக்கும் தொழிலாளர் 3 இலட்சம் தமிழரின் நிலை.
10 ஆயிரம் ரூபா தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை நாளாந்தம் பணம் புரள உழைப்போர் சிறு வணிகர்கள். அப் புரளலில் தேறும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாவுக்காக நாள் முழுதும் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கின்றார்கள். இத்தகைய சிறு வணிகர்களின் தொகை 3 இலட்சம் ஈழத் தமிழர் தாயகத்தில்.
பொது முடக்கத்தால் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நாளாந்தம் உழைக்காமல் மாதம்தோறும் வங்கியில் சம்பளத்தைக் குறைவின்றிப் பெறுகின்ற அரச ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள். அவர்களுள்ளும் கடமை உணர்வாளர் முடங்க விரும்பார். ஈழத் தமிழர் தாயகத்தில் அவர்களின் தொகை 3 இலட்சமே.
ஈழத் தமிழர் தாயகத்தில் பெருவணிகர் தொகை 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வரை. பொது முடக்கத்தால் இவர்களுக்கு இழப்புக் கணிசமாகும். எனினும், அந்த இழப்பைத் தாங்கும் வலிமை அவர்களுக்குப் பெருமளவு உண்டு.
பயண முன்பதிவுடன் காத்திருக்கும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர் யாவரையும் பொது முடக்கம் கடுமையான உளைச்சலுக்கு உள்ளாக்கும்.
பொது முடக்கத்துக்கு அழைத்த குபேரர்களான அரசியல்வாதிகளே, போராட்டங்களால் தொடர்ச்சியாகப் பொருள் இழந்து, ஊக்கம் இழந்து, மெது மெதுவாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தாயகத்தின் ஏழைகளான 8 இலட்சம் குடும்பத் தலைவர்கள் மீது, சார்ந்த பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றாதீர்கள்.
மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைத்தீர்கள். மக்கள் வரவில்லை என்ற குறை உங்களுக்கு. உங்கள் போராட்டம் ஈழத் தமிழர் தாயகம் முழுவதுமாக அமையவில்லை.
மருதனாமடத்தில் போராடினால் முசலியில் உணர்வு ஏறுமா? கொக்குவிலில் போராடினால் கல்முனையில் உணர்வு பீறிடுமா? குளப்பிட்டிச் சந்தியில் மண்டியிட்டால் கொக்கட்டிச்சோலையில் உணர்வு குமுறுமா?
25 ஆயிரம் சதுர கிலோமீற்றர் நீண்டு அகன்ற தமிழர் தாயகத்தை 5, 6 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்க முயலாதீர்கள். பிரதேச வாதத்தைத் தூண்டாதீர்கள். யாழ்ப்பாணிகள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என ஏனைய பிரதேசத்தவர் கூறும் நிலைக்குத் தள்ளாதீர்கள்.
போராட்டத்துக்கு உரிய காரணங்கள் உள்ளன. மனித நாகரிக வரலாறே போராட்டத்தின் பெறுபேறு. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
இன்றைய மறுவாழ்வுச் சூழ்நிலையில், தோல்வியால் முடங்கிய விடுதலை உணர்வுகளையும் தோல்வியால் இழந்த தற்சார்புப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் நிலையில், பொது முடக்கம் போராட்டமாகாது. இயல்பு வாழ்க்கையைக் குழப்புவது போராட்டமாகாது. பொருளாதாரத்தை வீழ்த்துவது போராட்டமாகாது.
பொது முடக்கத்தைக் கோராமல் போராட்ட உத்திகளை மாற்றுங்கள். இயல்பு வாழ்க்கையைக் குழப்பாமல், மீள் வளர்ச்சியை வீழ்த்தாமல் போராட்ட உத்திகளைத் தீர்மானியுங்கள்.
ஈழத் தமிழர் தாயகத்தின் மரபுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிவ சேனையினர் நிகழ்த்தி வருகிறோம். ஈழத் தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
ஒவ்வொரு போராட்டத்திலும் சிவ சேனையினர் வெற்றி அடைந்திருக்கின்றோம். எந்த ஒரு போராட்டத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பவில்லை. எந்தவொரு போராட்டத்திலும் எவரும் கைதாகவில்லை. அவ்வாறே நாங்கள் போராட்ட உத்திகளை வகுத்தோம், வெற்றியடைந்து வருகின்றோம்.
தோல்வியடைந்த சமூகம் நாங்கள். அடிமைகளாக வாழும் சமூகம் நாங்கள். இழப்புகளைக் கடுமையாகச் சந்தித்த சமூகம் நாங்கள். குபேரர்களான அரசியல்வாதிகளே, கஞ்சி குடிக்கும் மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
அரசியல் அடிமைகளாக உள்ள அவர்கள், பொருளாதார அடிமைகளாகத் தொடர முடியாது. பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்.” – என்றுள்ளது.