Trending

ஈழப்போர் வடக்கின் பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே ஏற்படும் – கம்மன்பில கண்டுபிடிப்பு

(LBC Tamil News) 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் வடக்கு கிழக்கு மாகாணம் மீள இணையும், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

13வது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வக்கட்சி மாநாட்டில்  ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகிறார்கள். ஆனால், காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

மாகாணசபை அமைச்சராக கடமையாற்றியமையால், எனக்கு இவ்விடயம் நன்கு தெரியும்.

காணி ஒன்றை குத்தகைக்கு விடும், நிர்வகிக்கும் அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைகளுக்குத்தான் உள்ளது.

ஜனாதிபதி, ஒரு காணியை பரிசாக வழங்க வேண்டும் என்றாலும், விற்க வேண்டும் என்றாலும், மாகாணசபையின் ஆலோசனைக்கு அமைவாகவே அதனை செய்ய வேண்டும்.

காணி அதிகாரம் தொடர்பாக 13 இல், தற்போது மிச்சம் உள்ள விடயம் என்னவெனில், தேசிய காணி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது மட்டும்தான்.

அப்படியானால், உண்மையில் நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரங்கள் தான் என்ன?

வடக்கு- கிழக்கை இணைத்தல் அல்லது இந்த மாகாணங்களுக்கான தனியான மாகாணசபை ஒன்றை ஸ்தாபித்தல் மட்டும்தான் எஞ்சியுள்ளன.

எமது அரசமைப்பின் 54வது உறுப்புரையின், அ பிரிவின் 3 ஆவது சரத்தில், இரண்டு அல்லது மூன்று மாகாணசபைகளை இணைத்து ஒரு மாகாணசபையை ஸ்தாபிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

1987 இல், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டன.

அச்சட்டம் முடிவுக்கு வந்தவுடன், வடகிழக்கு மாகாணசபை முறைமையும் முடிவுக்கு வந்துவிட்டதாக உயர்நீதிமன்று அறிவித்தது.

இந்நிலையில், 13 ஐ மீள முழுமையாக நடைமுறைப்படுத்துவதானது வடக்கையும் கிழக்கையும் இணைக்க வழிவகை செய்துவிடும்.

ஏனெனில், எமது அரசமைப்பில் இதற்கான ஏற்பாடுகள் அப்படியேதான் உள்ளன.

கிழக்கிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதனை விரும்புவார்களா?

அப்படியில்லாவிட்டால், அரசமைப்பில் உள்ள 54வது உறுப்புரையின், அ பிரிவின் 3வது சரத்தை முற்றாக நீக்கிவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதற்கு நாம் தயார்.

அதேநேரம், தமிழ் பிரிவினைவாதிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கைக்கு வெளியே தனிஈழ அரசாங்கம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது.

அவர்கள், இலங்கையின் தனி ஈழத்தை ஸ்தாபிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை கோரி வருகிறார்கள்.

கிழக்கு திமோர், பாலஸ்தீனம் என்பவற்றில் நிலம் இல்லாத அரசாங்கம் தான் இன்றும் இருந்து வருகிறது. இதேபோன்றுதான், தமிழ் ஈழ அரசாங்கத்தின் பயணமும் அமைந்துள்ளது.

யுத்தத்தால் இவர்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால்தான் நிலரீதியிலான அரசாங்கத்தை இவர்களால் ஸ்தாபிக்க முடியாதுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், உத்தியோகபூர்வமல்லாத ஒரு இராணுவக்கட்டமைப்பு உருவாகிவிடும்.

சி.வி. விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாதிகள் வடகு முதலமைச்சரானால், தனி ஈழப்போர் , இலங்கை இராணுவத்துக்கும் வடக்கின் பொலிஸாருக்கும் இடையில்தான் ஏற்படும்.

இது முப்பதாயிரம் இராணுவத்தினரின் தியாகத்தை இல்லாது செய்து, மீள நாட்டில் இரத்த ஆறு ஓட வைக்கும் ஒரு செயற்பாட்டாகும்.

2001 இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமரான போதும் சரி, 2015 இல் பிரதமரான போதும்சரி, அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதாக கூறிய காரணத்தால் இரண்டு – மூன்று வருடங்களிலேயே அப்பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, மீள அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் கைவைத்து, நாட்டையும் உங்களையும் ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம் என நாம் ஜனாதிபதியிடத்தில் இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

(LBC Tamil News)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.