நுவரெலியா வைத்தியசாலையில் அமைதியைக் குலைத்த முன்னாள் இராணுவ மேஜர் கைது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களிடம் முறைகேடாக நடந்துகொண்டு, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் விடுமுறைக்காக நுவரெலியாவுக்கு வந்திருந்த நிலையில், மது அருந்தியதன் காரணமாக நிலை தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர், சிகிச்சைக்காக வைத்தியசாலையை அணுகிய அவர், மருத்துவ ஊழியர் ஒருவரின் நடந்துகொள்ளும் முறையை முன்வைத்து அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகின்றது. கோபமடைந்த அவர் தனது மேலாடையை கழற்றி வீசியும், அங்கிருந்த பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் தலையிட்டு விசாரிக்க முயன்றபோது, அவரும் குறித்த நபரின் அவதூறுகளுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, சந்தேகநபரை கைது செய்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மஹேந்திர செனவிரத்ன, குறித்த நபர் மது போதையில் வந்ததாகவும், கனிஷ்ட ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன்னையும் அவதூறாக திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மேஜர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.