யாழில் ஒலி பெருக்கிக்குள் கஞ்சா கடத்திய கில்லாடிகள் சிக்கினர்!
யாழ்ப்பாணத்தில், சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் (box) கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் கடந்த 30 ஆம்திகதி 04 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி , 07 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி இருந்தனர். அதற்கு நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களிடம் இருந்து இரகசிய தகவல்களை பெற்று , பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மணி பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த போது , சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.
அதன் போது , சிறிய ரக ஒலிபெருக்கி சாதனம் ஒன்றினுள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து எடுத்து செல்வது பொலிஸாரினால் கண்டறியப்பட்டது. அதனை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டனர்.
அதேவேளை அவர்களின் உடமையில் இருந்தும் ஒரு தொகை கஞ்சாவை மீட்டனர்.
அதனை அடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் மூவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்னர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.