இலங்கை மக்களுக்கான அரசாங்கத்தின் புத்தாண்டு பரிசு விபரங்கள் ஒரே தொகுப்பில்!

உலக வாழ் மக்கள் இன்றையதினம் 2024ஆம் ஆண்டினை மிகவும் மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புக்களோடும் வரவேற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் இன்றையதினம் புதுவருடக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை வாழ் மக்கள் விலை அதிகரிப்புகளோடு புத்தாண்டை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து நாடு பல இக்கட்டான தருணங்களுக்கு முகம்கொடுத்ததுடன், அரசாங்கம் பொருளாதார ரீதியான பல தீர்மானங்களை எடுத்திருந்தது.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், நடுத்தர நிலையில் உள்ள மக்கள் என பலரும் பாதிப்படையும் வகையில் இந்த பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக இன்று முதல் அதிகரிக்கின்றது.
இது பாரிய சுமையை வருட ஆரம்பத்திலேயே ஏற்படுத்தக் கூடும் என பலரும் எதிர்வு கூறி வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புத்தாண்டு ஆரம்பித்த முதல் நாள் காலையிலேயே எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 38 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 464 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு லீட்டர் இலங்கை வெள்ளை டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 358 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல எரிபொருள் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை உயர்த்தப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ள போதிலும் விலை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும், பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. எனினும், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறைந்த பட்ச பேருந்து கட்டணம் 31 ரூபாவிருந்து 35 ரூபாவாகவும், ஏனைய பேருந்து கட்டணங்கள் 20 தொடக்கம் 25 வீதமாகவும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேருந்துகளின் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேருந்துகளின் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைபேசி கட்டணங்கள், தொலைக்காட்சி கட்டணங்கள் உள்ளிட்டவையும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரட்டுகளின் விலைகளும் அதிகரிக்கின்றன.

இலங்கை புகையிலைக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி வௌ;வேறு வகையான சிகரட்டுகள், ரூபா 5, 15, 20, 25 என்ற அடிப்படையில் அதிகரித்துள்ளன.

மேலும், நீர் கட்டணங்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதேசமயம், கையடக்க தொலைபேசிகளின் விலையும் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அதிகரிக்கும் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தொடர் விலை அதிகரிப்புக்களின் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிற்றுண்டி வகைகள், தேநீர் வகைகள், கொத்து, மதிய உணவுப் பொதி, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் விலையும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தாண்டி, பொதுமக்களின் அன்றாடத் தேவையாக காணப்படும் மரக்கறிகளின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதுடன், பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதை காண முடிந்தது.

பச்சை மிளகாய், வெங்காயம், கரட் உள்ளிட்டவற்றின் விலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.

சந்தைகளில், மரக்கறிகளின் விலையை மாத்திரம் கேட்டு விட்டு மக்கள் திரும்பிச் செல்வதை காணக் கூடியதாக இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் இந்த வருட ஆரம்பம் என்பது இலங்கை வாழ் மக்களுக்கு நெருக்கடியோடு ஆரம்பித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.