இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்காக மனம் வருத்துகிறேன் – அமைச்சர் டக்ளஸ்

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் எமது இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்காகவும் அசௌகரியங்களுக்காகவும் அவமானத்திற்காகவும் மனம் வருந்துவதாக அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். முற்றவெளியில் நேற்று இடம்பெற்ற தென்னிந்திய இசைப் பிரலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் எமது பிரதேசங்களில் நடைபெறுகின்றபோது தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“‘எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவமானது, இசை நிழச்சியை கண்டு இரசிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் ஏற்பாட்டாளர்கள் கலந்துரையாடி அனைத்து விடயங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.