பொன்னாவெளி இல்லை என்றால் தென்மராட்சி
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலை சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
தென்மராட்சியில் உள்ள தனியார் காணிகளில் சுண்ணக்கல் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மராட்சியில் குறிப்பாக, மந்துவில், வேம்பிராய் பகுதிகளில் தனியார் ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி, தனது காணிக்குள் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை அவரிடம் வாங்கி அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.
தனிநபர்களின் செயற்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன. தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது, அரச காணிகளிலும் தமது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நன்னீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது.
அவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால், நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றம் சாட்டியிருந்தார்.
ஏற்கனவே பூநகரி பொன்னாவெளியில் திருகோணமலையிலுள்ள தனியார் சீமெந்து தொழிற்சாலை நிறுவனமே சுண்ணக்கல் அகழ்விற்கு முற்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.