களவாக பிரான்ஸ் செல்ல முற்பட்டு பெலரஸ் எல்லையில் இறந்த கிளிநொச்சி நபரை பற்றி நண்பன் சொல்வது என்ன?
முகநூலில் வந்த பதிவினை இங்கு தந்துள்ளோம்….
யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு.
ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாது கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான சிரிப்பும் , கலகல எனும் பேச்சும் இவன் தனித்துவம்.
வெளித்தெரியாத தமிழ்த்தேசியவாதி. அரசியல்விடயங்களை தெரிந்து கொள்ள இவன் அப்பப்ப அழைப்பெடுப்பான். அண்ணை என்று தான் நானும் அழைப்பேன் அவனும் அண்ணை என்றே என்னை அழைப்பான். நாம் தவறான அரசியலால் ஆழப்படுகின்றோம் எனும் ஆதங்கம் இவனிடம் அதிகமாகவே இருந்தது.
எங்கு கண்டாலும் நின்று பேசாது நாம் கடந்ததே இல்லை. நல்லதொரு தந்தை யுகா. யுகாவின் மகன் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன் நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்றிருந்தான். எப்போதும் தன் ஜந்து பிள்ளைகளையும் ஆழமாக நேசித்தவன் யுகா. அண்ணை நாம் இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்க்கவே கஸ்டமாக இருக்கு அந்த காலத்தில் எங்களை வளர்க்க எங்கள் அம்மா அப்பா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என பல முறை கூறுவான் யுகா….
வியாபார உலகின் புலமையாளனாக இருந்தும் மனித கடத்தல் காரர்களிடம் இவன் ஏமாந்து விட்டானே எனும் ஏக்கம் தான் என்னில் அதிகமாக எழுகின்றது.
பிரான்ஸ் செல்வதற்காக விமானம் மூலம் ரஸ்யாவிற்கு ஆழ்கடத்தும் முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு ஆபத்தான சர்வாதிகாரியால் ஆழப்படும் பெலரூஸ் நாட்டிற்கு ரஸ்யாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றான். அங்கிருந்து போலாந்திற்கு செல்வதற்கு பெலரூஸ் எல்லையை கடக்க 700 km தூரம் ஆபத்தான காட்டு பாதைகளால் அழைத்து செல்லப்படும் போது நடக்க முடியாது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தனது மனைவிக்கு தொலைபேசி எடுத்து என்னால் இனி ஒரு அடிகூட நடக்கமுடியாது என்னை யாராவது காப்பாற்றினால் தான் நான் உயிர் பிழைப்பேன் என கூறியுள்ளார். அது தான் யுகா எடுத்த இறுதி அழைப்பு. யுகாவுடன் சென்ற 07 பேரும் இவனை இடைநடுவே விட்டு விட்டு சென்று விட்டனர்.
யுகாவின் மனேதிடம் இடம் கொடுத்தாலும் அவன் உடல்நிலை
700 km தூரத்தை நடந்து கடக்க ஒருபோதும் இடம் கொடுக்காது. உணவின்றி உறக்கமின்றி, ஓய்வின்றி, உடலை உறைய வைக்கும் குளிர் நிறைந்த காடுகளுக்குள்ளால் மாதக்கணக்கில் நடந்து ஆபத்தான போர்முனை எல்லைகளை கடக்க கோடி ரூபா காசையும் கொடுத்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வெளிநாடு செல்லும் ஈழத்து சொந்தங்களே ஒருகணம் நின்று சிந்தியுங்கள்.
பெரும் போர் நடக்கும் ரஷ்யாவில் இருந்து திருட்டு பாதைகளால் ஆபத்தான எல்லைகளை கடக்க இந்த மனித கடத்தல் காரர்களின் பொய்களை நம்பி ஒரு அற்புதமான மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். யுகாவின் ஜந்து பிள்ளைகளையும் வளர்ப்பது அந்த இளம் தாய்க்கு இனி எவ்வளவு சவாலாக இருக்கும்.
பெலரூஸ் போலாந்து எல்லைகள் போர் மேகங்கள் சூழ்ந்த ஆபத்தான பகுதி. பொலரூஸ் போலாந்தை தாக்கலாம் எனும் அச்சத்தில் நேட்டோ நாடுகள் அந்த எல்லை முழுவதும் அணு ஆயுதங்களை கூட நிலை நிறுத்தி வைத்திருக்கின்றது. இப்படியான ஆபத்தான எல்லைகளை கடந்து செல்ல தீர்மானிக்கும் பயண முகவர்கள் உண்மையில் மனித குலத்திற்கு எதிரான விரோதிகள் தான்.
இப்படியான முடிவுகளை எடுத்து விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து. உங்களை நம்பி வாழும் உறவுகளையும் நடுவீதியில் விட்டு செல்லும் இந்த துன்பகரமான முடியை எமது இளைய தலைமுறை இனியும் எடுக்கக்கூடாது. யுகா தன் மரணத்தின் மூலம் ஒரு உண்மையை எமக்கு உணர்த்தி செல்கின்றான்.
மனித கடத்தல் காரர்கள் சிறந்த நடிகர்கள் அவர்கள் அறிவுமிக்க கண்களையே ஏமாற்றி விடுகின்றனர் என்பது தான் அந்த எளிமையான உண்மை.
குறிப்பு :– பிரான்ஸ் செல்ல ஒரு கோடி ரூபாவரை பயண முகவர்கள் கறந்து எடுத்து விடுகின்றனர். அந்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் மாதாந்தம் 125,000/- ரூபா வட்டியாக வரும். அத்தேடு நாம் இங்கு வழமையான உழைப்பதையும் சேர்த்தால் மாதாந்தம் 200,000 ரூபா வருமானம். நின்மதியாக குடும்பத்துடன் மகிழ்வாக வாழலாம் நமது நாட்டில்.
மாதாந்தம் ஒருமுறையேனும் தவறாது வெளிநாட்டில் இருந்து 200,000 ரூபா அனுப்பும் உறவுகள் யாரும் இருக்கா ? எனும் கேள்விக்கு விடை தேட வேண்டும் எங்கள் மக்கள்.