புலிகள் பௌத்தத்திற்கு பாதுகாப்பு கொடுத்தனர்
(LBC TAMIL) விடுதலைப் புலிகளின் காலத்தில் பௌத்த மத வழிபாட்டுக்கு எந்தத் தடையும் இல்லை, மாறாக அது பாதுகாக்கப்பட்டது. நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு விடுதலைப் புலிகள் வழங்கிய மரியாதையே அதற்குக் காரணம் என வடகிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலகஸ்வெவ விமலசரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று குருந்தூர் மலைப்பிரச்சினை தொடர்பான சர்வமத மக்கள் தேசிய ஒற்றுமைக்கான ஒன்றியமும் இந்து பௌத்த சங்கமும் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பு தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சமயத் தலைவர்கள், “குருந்தூர் மலை விவகாரம் தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானது. அதை ஒரு மதம் சொந்தம் என்று கூறக்கூடாது.
இங்கு சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பது முரண், ஆனால் தமிழ் பௌத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை.
தென்னிலங்கையில் எந்தத் தொடர்பும் இல்லாத சிங்கள பௌத்த கிராமத்திற்குள் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரோ, சைவப் பாதிரியாரோ வந்து அதனைத் தமது தளமாகக் கூறினால் அதனை சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக் கொள்வார்களா அல்லது விட்டுவிடுவார்களா?
அப்படியிருக்கையில், தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலைக்கு ஒரு பௌத்த பிக்கு தினமும் சென்று உரிமை கோரினால், தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்.
வழிபாட்டுத் தலங்கள் அனைத்து மதங்களுக்கும், சாதிகளுக்கும் சொந்தமானது. நாங்கள் இலங்கையர்கள், சிங்கள பௌத்தர்கள் அல்ல. யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்று பொதுவாக நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை அரசியலாக்கி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.