2.6% ஊழியர்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர்
சம்பாதித்தவுடன் செலுத்தும் வரியானது 2.6% ஊழியர்களுக்கு மாத்திரமே விதிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, இலங்கையின் மொத்த பணியாளர்கள் 46 இலட்சத்தி 45 ஆயிரத்தி 572பேர். இவர்களில் 22 இலட்சத்தி 31ஆயிரத்தி 620 பேரின் மாத சம்பளம் 30,000 ரூபா ஆகும்.
இதில் 1 இலட்சத்தி 20 ஆயிரத்தி 925 நபர்கள் அல்லது 2.6% பணியாளர்கள் மாத்திரமே வரி செலுத்தும் வகையின் கீழ் வருகிறார்கள்.
2023 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் ரூ. 3,615 பில்லியன் மற்றும் செலவு ரூ. 5,419 பில்லியன், ஜனவரி 2023க்கான வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே 350% வித்தியாசம் பதிவாகியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தால் பணத்தை அச்சிட முடியாது, வெளிநாட்டுக் கடன்களையும் பெற முடியாது, அதேவேளை உள்ளூர் வங்கிகளில் பெறக்கூடிய கடன்கள் அதிகபட்ச வரம்பை எட்டியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சிரமங்களை அனைவரும் தாங்கிக்கொண்டு பொறுப்புடனும் சிந்தனையுடனும் செயற்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.