வெள்ளத்தை வேடிக்கை பார்க்க மாவடிப்பள்ளியில் அலை மோதும் மக்கள்!
போக்குவரத்துக்கள் தடைப்படும் அளவிற்கு மாவடி பள்ளியில் வெள்ளம் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் அடை மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அணைக்கட்டுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளமையால் மக்கள் கடுமையான அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து அபாயகரமானதாக மாறியுள்ளது.
இப் பாதைகளின் ஊடாக மோட்டார் சைக்கிள், ஓட்டோ, கார் என்பன செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சாய்ந்தமருது, கல்முனை, மாளிகைக்காடு, காரைதீவு, மருதமுனை, நிந்தவூர் போன்ற பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் சாரை சாரையாக குடும்பம் சகிதம் வெள்ள அனர்த்த நிலைமையினை பார்வையிடுவதற்காக மாவடிப்பள்ளியை நோக்கி மக்கள் அலை மோதிய வண்ணம் உள்ளனர்.
இதனால் கல்முனை- அக்கரைப்பற்று மற்றும் கல்முனை- அம்பாறை வீதிகள் வாகன நெரிசலால் கடும் போக்குவரத்து சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் நிலை உருவாகி உள்ளது.
வெள்ளத்தில் இறங்கி சிறுவர்கள், வயோதிபர்கள் விளையாடுவதனால் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் உயிர் அச்சுறுத்தல் கூட நிலவுகிறது.
மக்கள் அலை மோதுவதனால் தற்காலிக வர்த்தக நிலையங்களும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.