தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை வட, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டம் – சாணக்கியன்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து சென்று குடியேற்றம் செய்யும் முயற்சியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அயலக தமிழர் மாநாட்டில் பங்கேற்ற சாணக்கியன் எம்.பி, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் அமைப்பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் போது, அவர் கூறியது:
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பலவித அசாதாரண சூழல்களில் வெளியேறிய தமிழ் மக்கள் தற்போது தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களை தாயகத்தில் அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்றுவது அவசியமான பணியாகும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் தாயகத்துக்கு திரும்புவது மிக மிக அவசியமாக இருக்கிறது.”
இதை நிறைவேற்ற, ஒரேநேரத்தில் அனைவரையும் அழைத்து வருவது சாத்தியமற்றது, ஏனெனில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது ஒரு சிக்கலான செயலாக இருக்கும். எனவே, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என சாணக்கியன் தெரிவித்தார்.
அதற்கான ஆலோசனைகளில், அதிகாரிகள் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் அழைத்து வந்து குடியேற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறான முயற்சி முதற்கட்டமாக விரைவில் முன்னெடுக்கப்படும் என சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டார்.