சிறை அதிகாரிகள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழப்பு

மெகசின் சிறையில் போதைப்பொருள் சோதனையின் போது தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி மஹரகம பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 54 வயதான ஹேவாதீர தொன் கெமுனுஜித் என்பவர், கொழும்பு மெகசின் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததன் பின்னர், கடந்த 26ஆம் திகதி சிறை அதிகாரிகள் இருவர் அவரை சோதனை செய்ய முயன்றனர்.
சோதனையின் போது, கைதி ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாக கூறப்படுகிறது. இதற்குப் பின்னர், சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் இணைந்து அவரை மிகப்பெரிய அளவில் தாக்கியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பலத்த காயமடைந்த அவர், முதலில் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16ஆம் திகதி பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை பொலிஸாரின் விசாரணைகளில், சிறையில் உள்ள மற்ற கைதிகளும், அந்த கைதி போதைப்பொருளை விழுங்கிய பின்னர், சிறை அதிகாரிகள் மற்றும் இரண்டு கைதிகள் இணைந்து அவரை தாக்கி, வாந்தி எடுக்க வைப்பதற்காக உப்பு கலந்த நீரை இரு போத்தல்களாக அருந்த வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் சம்பத் ஜயவர்தனவின் மேற்பார்வையில் மெகசின் சிறைச்சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.