தென்னிலங்கை தரப்பை மாற்றாக முன்னிறுத்துவது தற்கொலைக்கு சமம் – யாழ் பல்கலை எச்சரிக்கை
“தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிரான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை உருவாக்குவதுதான் உண்மையான மாற்றம்” என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு மற்றும் கவர்ச்சி அரசியலின் மூலம் தென்னிலங்கையிலிருந்து தமிழர் அரசியலுக்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்கு சமமாகும் என்றும், தமிழ் மக்களின் உரிமைகளை பொருளாதார நெருக்கடியை தாண்டி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியத்தினர் கூறினர்.
மேலும், தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக தமிழ் இளையோர்களிடையே உருவாகியுள்ள மாற்றத்தை யாராலும் தவிர்த்து பார்க்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழ்த் தேசியம் முழு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான பயணத்தை சீர்குலைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கு தீர்வாக மாற்ற முயற்சிப்பது தவறு என்றும், தமிழ் மக்களின் இறைமை உரிமையை சுருக்க முயலும் செயல்களை கண்டிப்பதாகவும், உண்மையான மாற்றத்தை களத்தில் கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.